Skip to content

பாரம்பரிய கட்டிடங்களில் பொதிந்துள்ள அறிவுச் செல்வத்தை எதிர்காலத்துக்காகப் பாதுகாப்போம்

Natkeeran edited this page Jun 6, 2017 · 4 revisions

பாரம்பரிய கட்டிடங்களில் பொதிந்துள்ள அறிவுச் செல்வத்தை எதிர்காலத்துக்காகப் பாதுகாப்போம்

இ. மயூரநாதன், கட்டிடக்கலைஞர்.

பழம் பெருமைகளைப் பறைசாற்றிக் கொள்வதிலும், நமது தனித்துவமான குணாதிசயங்களையும், கலை, கலாச்சாரங்களையும் புழுகித் திரிவதிலும் இலங்கைத் தமிழராகிய நாம் வேறெவருக்கும் விட்டுக் கொடுப்பவர்கள் அல்ல. ஆனாலும், நடைமுறையில் இத்தகைய பாரம்பரியப் புகழுக்கு நம்மை அருகதையுள்ளவர்களாக ஆக்கிக் கொள்வதற்கும், நமது காலத்தில் நமது கலை கலாச்சாரம் தழுவிய அறிவுத்துறைகளுக்கு நம்மாலானதைச் செய்தோம் என்று பெருமைப்படுவதற்கும் என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம் என்பது மிகப் பெரிய கேள்வியாகும். பொதுவாக நாம் நமது பாரம்பரிய அறிவுத் துறைகளுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை எனலாம்.

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய நாட்டுடனோ அல்லது இனத்துடனோ தன்னை இனங்கண்டு அதனுடன் தன்னை விசுவாசமாகப் பிணைத்துக்கொள்வதற்கு அதன் தனித்துவமான, சிறப்பான குணாம்சங்கள் பலமுள்ளவையாக வளர்த்தெடுக்கப்படுதல் உதவும். எனவே நமது சிறப்புப் பண்புகளின் வெளிப்பாடாக அமைகின்ற மொழி, கலை, கலாச்சாரம் போன்ற பல்வேறு அம்சங்களும் உரிய முறையில் பேணப்பட்டுக் காலத்துக்கும் தேவைகளுக்கும் ஏற்றபடி செழுமைப்படுத்தப்படல் வேண்டும்.

Table of Contents

நமது கட்டிடக்கலைப் பாரம்பரியம்

இவ்வாறான அம்சங்களிலே கட்டிடக்கலை முக்கியமானதொன்று. இலங்கைத் தமிழரைப் பொறுத்தவரை நமது பிரதேசத்தில் உயர் பண்பாட்டுக்குரிய பழமை வாய்ந்த கட்டிடங்கள் நல்ல நிலையிலோ அல்லது அழிபாடுகளாகவோ இல்லை என்று கூறலாம். இருந்திருக்கக் கூடியனவும் கூட காலனித்துவ ஆட்சிக் காலங்களின்போது ஏற்பட்ட கலாச்சார அழிப்பு நடவடிக்கைகளின்போது இல்லாமல் போயின.

உயர் பண்பாட்டுக்குரிய பெரிய கட்டிடங்கள்தான் ஒரு சமூகத்தின் கட்டிடக்கலைப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கின்றன என்பதில்லை. சிற்ப வேலைப்பாடுகளும், சித்திரங்களும், வேறு இன்னோரன்ன அலங்கார அமைப்புக்களும் மட்டுமே கட்டிடக்கலையின் சிறப்புக்கு ஆதாரமாக அமைவதில்லை. சாதாரண பொதுமக்களின் வாழ்விடங்களும், வேறு சிறிய எளிமையான கட்டிடங்களும்கூட நமது பாரம்பரியத்தின் உயிரோட்டத்தைத் தம்முட் கொண்டு சிறப்பியல்புள்ள கட்டிடக்கலை வடிவங்களாகத் திகழ்கின்றன.

காலனித்துவ ஆட்சிக்காலத்திலும் அதன் பின்பும் கட்டப்பட்டவையும், பல்வேறு அளவுகளிலே அந்நிய கலாச்சாரக் கூறுகளினதும், புதிய தொழில்நுட்பங்களினதும் அறிமுகத்தால் அபிவிருத்தி செய்யப்பட்டனவுமாகிய அமைப்புக்களையுடைய பாரம்பரியக் குடியிருப்பு வீடுகள் இன்றும் பல்வேறு இடங்களிலும் பரவலாகக் காணப்படுகின்றன. இதே அடிப்படையில் அமைந்த மடங்கள், கோவில்கள், மற்றும் சிற்றளவிலான வேறு கட்டிடங்களும் உள்ளன. இவ்வாறான கட்டிடங்கள் ஒரு நீண்ட காலப் பகுதியினூடாக வளப்படுத்தப்பட்டு வந்த நமது பாரம்பரியத்தின் ஆத்மாவின் வெளிப்பாடாக இருக்கின்றன என்று கூறினால் மிகையல்ல. இத்தகைய கட்டிடக்கலைப் பாரம்பரியமானது தனிப்பட்ட மனிதர்களின் ரசனையின் அடிப்படையில் உருவானதல்ல. அது சமுதாயம் முழுவதினதும் ஆழமான அநுபவத்தின் அடிப்படையில் வளர்ச்சி பெற்றது.

நமது சமுதாயம் கலாச்சாரப் பேரழிவுக்கு உட்பட்டிருந்த காலனித்துவ ஆட்சிக்காலப் பகுதிகளிற்கூடத் தொடர்ந்துகொண்டிருந்த இந்தப் பாரம்பரியமானது அண்மைக் காலங்களில் முற்றாகவே கைவிடப்பட்டது துரதிர்ஷ்டவசமானது.

அழிந்துகொண்டிருக்கும் பாரம்பரியக் கட்டிடங்கள்

போர்த்துக்கீசர் காலம் முதல் இன்று வரை தொடரும் அந்நியர் நடவடிக்கைகளினால் பாதிப்படைந்த, பாதிப்படைகின்ற கட்டிடங்கள் ஒருபுறமிருக்க, மண்ணின் மைந்தராகிய எங்களாலேயே அழிந்துபோகின்ற நமது கட்டிடக்கலைப் பாரம்பரியத்தின் சின்னங்கள் எத்தனை? பாரம்பரிய அமைப்பு முறையிலே கட்டப்பட்ட பலவகையான அருமையான கட்டிடங்கள் – வீடுகள், மடங்கள், கோயில்கள், வேறு பொதுக் கட்டிடங்கள் – இடிக்கப்பட்டு அவ்விடங்களிலே எவ்வித சிறப்புக் குணாம்சங்களையும் கொண்டிராத கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன.

இத்தகைய அருமையான கட்டிடங்கள் இடிக்கப்படுவதற்கான காரணங்கள் பெரும்பாலும் வலுவற்றவை, அற்பமானவை, அறியாமையின் பாற்பட்டவை. எனினும், இத்தகைய அழிப்புக்களை “பாஷன் இல்லை”, “காலத்துக்கு ஒவ்வாது” போன்ற வாதங்களினால் நியாயப்படுத்த முயல்வார்கள். ஆனால், இதே கட்டிடங்களை நவீனமானவையாகவும், காலத்தின் தேவைகளுக்கு ஏற்ற வகையிலும் திருத்தியமைக்க முடியுமா என்று எவரும் சிந்திப்பதில்லை. இவ்வாறு திருத்தியமைப்பதன் மூலம் கவர்ச்சிகரமான விளைவுகளைப் பெறுதல் சாத்தியமே.

பலத்த எதிப்புகளுக்கு மத்தியிலும் சில வருடங்களுக்கு முன் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட யாழ் சத்திரத்துச் சந்தியில் இருந்த சத்திரம், புனருத்தாரணம் என்ற பெயரில் ஆயிரத்தோடு ஆயிரத்தொன்றாக அமையப்போகும் ஒரு கட்டிடத்தைக் கட்டுவதற்காக அழிக்கப்பட்ட சுவாரசியமான, வித்தியாசமான அமைப்பைக் கொண்டிருந்த அரசடி வீதியில் இருந்த செல்லப் பிள்ளையார் மடம்/ கோயில், ‘“நாகரீக”த்துக்கு ஒத்த வகையில் கட்டப்படும் வீடுகளுக்கு இடன்விட்டு அழிந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பழைய வீடுகள் போன்றவைகளைப் புதிய தேவைகளுக்கு ஏற்றபடி திருத்தியமைத்திருக்கலாம்.

எல்லாக் கட்டிடங்களையுமே பழமைச் சுவடுகளாக நிறுத்தி வைத்திருத்தல் சாத்தியப்படாது என்பது உண்மையே. புதிய வாழ்க்கை முறைகளுக்கும் தேவைகளுக்கும் இடைஞ்சலாக இருப்பவை புதிய கட்டிடங்களால் மாற்றீடு செய்யப்படுதல், அதிகரித்துச் செல்லும் நிலத் தேவைகளுக்கு அமைய நிலத்தை வீணாக்கும் கட்டிடங்கள் அகற்றப்படுதல், திருத்த முடியாதபடி பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கப்படுதல் என்பன சில வேளைகளில் நியாயமாக இருக்கலாம். ஆனாலும் அழிவுகள் நியாயப்படுத்தக் கூடியனவா? இல்லையா? என்பதல்ல பிரச்சினை. சரியானதும், தவறானதுமான பல்வேறு அடிப்படைகளில் நமது கட்டிடக்கலைப் பாரம்பரியம் சுவடே இல்லாமல் அழிந்துகொண்டிருக்கிறது என்பதுதான் உணரப்பட வேண்டியது.

பல்லாயிரக் கணக்கான வருடங்களில் பலரின் உழைப்பினால் செழுமைப்படுத்தப்பட்டுப் புழக்கத்திலிருந்த பாரம்பரிய முறைகளில் பொதிந்திருக்கக்கூடிய அறிவுச் செல்வத்தை எவ்வித ஆராய்வுமின்றிக் காலத்தின் கையில் விட்டெறிவது நாம் எதிர்காலச் சந்ததியினருக்குச் செய்யும் துரோகமாக அமையும்.

என்ன செய்ய வேண்டும்?

வரலாற்று, கலாச்சார முக்கியத்துவம் கூடிய கட்டிடங்களும், அமைப்புக்களும், சூழல்களும் கட்டாயமாகப் பாதுகாக்கப்பட வேண்டியவை. பாதுகாப்பதில் அதிக சிக்கல்கள் இல்லாத வேறு பாரம்பரியக் கட்டிடங்களும் பாதுகாக்கப்பட வேண்டியவையே.

தவிர்க்க முடியாதபடி அழிவை எதிர்நோக்கியுள்ள, வேறு வழிகள் இன்றி அழிக்கப்பட வேண்டிய அல்லது எதிர்காலத்தில் உரிமையாளர்களால் அழிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கான வழிகள் இல்லாத பாரம்பரியக் கட்டிடங்களை ஆவணப்படுத்தியாவது வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். வரைபடங்கள், புகைப்படங்கள், “வீடியோ” பதிவுகள், எழுத்துமூல விபரங்கள் போன்ற வடிவங்களிலே இவ்வாறான ஆவணங்கள் அமையலாம்.

இவை தவிர மக்கள் பாரம்பரியக் கட்டிடங்களின் நியாயமான பெறுமதியை உணர்ந்து தாங்களாகவே அவற்றைப் பாதுகாப்பதற்கும், அவற்றின் தன்மை கெடாமல் திருத்தி உபயோகிப்பதற்கு ஊக்கம் கொடுக்கும் வகையிலும் பிரச்சாரம் அவசியம். சம்பந்தப்பட்ட நிபுணர்களும், நிறுவனங்களும், பத்திரிகைகளும் இதில் தமது பங்களிப்பைச் செலுத்த வேண்டும்.

சில பயனுள்ள நடவடிக்கைகள்

  • முக்கியத்துவம் கூடிய கட்டிடங்களை இனங் காணலும் அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தலும்.
  • ஆவணப்படுத்துவதற்கு ஏற்ற கட்டிடங்களை இனங்காணல், அவற்றை ஆவணப்படுத்தல்.
  • சேதமடைந்த அல்லது பகுதி அழிவுற்ற இவ்வாறான கட்டிடங்களை மீள அமைக்க அல்லது அதன் சில பகுதிகளையாவது உரிய முறையில் பாதுகாக்க ஒழுங்கு செய்தல்.
  • பாரம்பரிய, வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கட்டிடங்கள் சம்பந்தப்பட்ட திருத்த வேலைகள், விஸ்தரிப்பு, மீள் நிர்மானம் போன்றவற்றில் விசேட கட்டுப்பாடுகளை விதிக்க உரியவர்களை வற்புறுத்துதல்.
  • ஆய்வுகளை ஊக்குவித்தல், ஆய்வுக் கட்டுரைகளைச் சேகரித்தல், அவற்றை வெளியிடுதல்.
  • இவ்விடயம் சம்பந்தமான கட்டுரைகள், கருத்துக்கள் போன்றவற்றைப் பத்திரிகைகளில் வெளியிட ஏற்பாடு செய்தல்.
  • கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்தல்.
  • மேற்படி நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும், ஊக்குவிப்பதற்குமான அமைப்பு ஒன்றை உருவாக்கல்.

மூல ஆவணம்

https://docs.google.com/document/d/15w7bRfbM877I5L41gpqZW4Dp761Fu543IrjtKqf2oYc/edit?usp=sharing

வெளி இணைப்புகள்

  • http://www.malaysiadesignarchive.org/an-influence-of-colonial-architecture-to-building-styles-and-motifs-in-colonial-cities-in-malaysia/
  • http://www.africanvernaculararchitecture.com/
  • https://meta.wikimedia.org/wiki/Connected_Open_Heritage
  • http://dicrc.in/traditional-and-vernacular-building-tvb
Clone this wiki locally